ஈராண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கிய பிரதமர்

ஈராண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கிய பிரதமர்

1 mins read

வெலிங்டன்: நியூசிலாந்தில் தனது தலைமையிலான அரசாங்கம் செய்த ஈராண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கிக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் (படம்) காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லேபர் கட்சியின் இளம் தலைவரான திருவாட்டி ஆர்டன், நியூசிலாந்துப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஈராண்டுகள் நிறைவடைகின்றன.

இதை முன்னிட்டு நியூசிலாந்து அரசின் ஈராண்டுகால சாதனைகளை இரண்டே நிமிடங்களில் விளக்கிக் கூறும்படி அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று காணொளிப் பதிவுக்கு தயாரானார் திருவாட்டி ஆர்டன். நியூசிலாந்து அரசு புதிதாக 92,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, 2,200 குடியிருப்புகளைக் கட்டியது, கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான மசோதாவைக் கொண்டு வந்தது, கைதிகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

இதனை விளக்க இவர் 2 நிமிடம் 56 வினாடிகள் எடுத்துக்கொண்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தக் காணொளியை அரை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதோடு, அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.