துபாய்: துபாயில் விழுந்த லாட்டரி சீட்டு ஒன்றில் கிட்டத்தட்ட $15 மில்லியன் திராம் (S$5.5 மில்லியன்) மதிப்புள்ள பரிசுத் தொகையை வென்றுவிட்டோம் என்று தெரியாமலேயே இந்திய ஊழியர் ஒருவர் மாயமாகிவிட்டார்.
எனினும், அவரிடம் எப்படியாவது பரிசுத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த லாட்டரி நிறுவனம் அவரை வலை வீசித் தேடி வந்தது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் 'அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி' குலுக்கல் மாதம்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதத்திற்கான பரிசை கேரளாவின் செங்கானூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன், 28, வென்றுள்ளார்.
$15 மில்லியன் திராம் பரிசாக வென்ற அந்த இளையரை, லாட்டரி நிறுவனம் கடந்த சில நாட்களாக தேடி வந்துள்ளது. லாட்டரியில் வெற்றி பெற்றது தெரியாமல் இருந்த அந்த இளையரைத் தீவிர தேடுதலுக்குப் பிறகு அண்மையில் அந்த லாட்டரி நிறுவனம் கண்டுபிடித்தது.
துபாயில் பணியாற்றி வரும் ஸ்ரீதரன், தன்னோடு பணியாற்றும் 21 நண்பர்களுடன் இணைந்து இந்த லாட்டரி பரிசைப் பகிர்ந்துகொண்டார். அவர்களில் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
பரிசு அறிவிக்கப்பட்டவுடன், அந்தத் தொகையை தனது நண்பர்களுடன் சமமாக பங்கிட்டுகொள்ளப்போவதாக அவர் அறிவித்தார்.

