சிரம்பான் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரனுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

சிரம்பான் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரனுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

2 mins read
75370d74-a316-4528-a4f9-48063acdc480
-

சிரம்பான் : தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின்பேரில் கைதான சிரம்பான் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பி.குணசேகரனுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளைக் கைவிட அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் செய்த விண்ணப்பத்தை சிரம்பான் அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை (நவம்பர் 6) ஏற்றுக்கொண்டது.

அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர் அஸ்லினா அஹாட் செய்த அந்த கோரிக்கைக்கு நீதிபதி மடிஹா ஹருல்லா அனுமதியளித்தார். இந்தக் கோரிக்கைக்கு இணங்குவதாக குணசேகரனின் வழக்கறிஞர் ஆர்.எஸ்.என்.ரேயரும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார். குணசேகரனின் நீதிமன்றத்திற்கு வரவில்லை. குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் செய்தியறிந்தவுடன், நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருந்த குணசேகரனின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டத்தினர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், டிஏபி கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர் டான் கொக் வாய் ஆகியோரும் அங்கிருந்தனர். இந்த வழக்கு சில நிமிடங்களுக்குள் முடிந்தது. பிற்பாடு, நீதிமன்றத்திற்கு வெளியில் பேசிய ரேயர், குணசேகரனுக்கு எதிரான அந்த இரண்டு குற்றச்சாட்டுகளின் விவரங்கள் தனக்குத் தெரியாது என்று கூறினார்.

"குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அரசாங்கத்தரப்பு இன்று காலையில்தான் எங்களிடம் தெரியப்படுத்தியது. இந்த வழக்கைத் தொடரப் போவதில்லை என்றும் அரசாங்கத்தரப்பு நீதிமன்றத்திடம் தெரிவித்தது," என்றார் அவர்.

குற்றச்சாட்டுகள் தொடரப்பட்டிருந்தால் மட்டுமே அவற்றின் விவரங்களைத் தனது தற்காப்புக் குழு அறிந்திருக்க முடியும் என்றார் திரு ரேயர். அவ்விரு குற்றச்சாட்டுகளும் பாதுகாப்பு குற்றச்செயல்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டத்தின் கீழானவை என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என்றார் அவர்.

வழக்கைத் தொடராததற்கான காரணத்தை அரசாங்கத்தரப்பு வெளியிடவில்லை.

"குணா தீவிரவாதி அல்ல. அவர் தனது தொகுதி மக்களுக்கு நற்சேவை புரிந்துவரும் கடப்பாடுமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்," என்று குறிப்பிட்ட திரு ரேயர், மற்ற நீதிமன்றங்களும் இதேபோல மற்ற எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

குணசேகரனும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனும் அக்டோபர் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதே சமயத்தில் பல்வேறு மாநிலங்களில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு மேலும் ஐவரை போலிசார் கைது செய்தனர்.

நவம்பர் 1ந்தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததன் தொடர்பில் குணசேகரன் மீதும் மற்ற சிலர் மீதும் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது. தனது சமூக ஊடகக் கணக்கின் வழியாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாக 60 வயது குணசேகரன்மீது குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.