துணி உலர்த்தி இயந்திரத்தில் பூனையை வீசிக் கொன்ற கணேஷுக்கு 34 மாதம் சிறை

துணி உலர்த்தி இயந்திரத்தில் பூனையை வீசிக் கொன்ற கணேஷுக்கு 34 மாதம் சிறை

2 mins read
c5043290-4a62-4536-abe8-72f78acc9297
-

கர்ப்பமாக இருந்த ஒரு பூனையைத் துணி உலர்த்தும் இயந்திரத்திற்குள் தூக்கிப் போட்டு கொன்ற மலேசிய ஆடவருக்கு 34 மாத சிறைத்தண்டனையும் 40,000 ரிங்கிட் (S$13,135) அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இடம்பெற்ற அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது. ஆடவர் ஒருவர் துணி உலர்த்தும் இயந்திரத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதும் இன்னொருவர் பூனையை அதனுள் போடுவதும் அதன்பின் இயந்திரத்தை 'ஆன்' செய்து விட்டு அங்கிருந்து சென்று விடுவதும் அக்காணொளியில் தெரிந்தது. அந்த இயந்திரத்தின் முன்பாக ஆடவர் மூவர் நின்றிருந்த நிலையில், பூனையை அதனுள் போட்டது கே.கணேஷ், 42 (படம்), என்பது தெரியவந்தது.

தண்டனை விதிக்கப்படுமுன் இந்தத் தகவல் கவனத்தில் கொள்ளப்பட்டது. "விலங்குகளைத் துன்புறுத்துவோருக்கு இந்தத் தண்டனை ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார் நீதிபதி ரஸியா கஸாலி.

தீர்ப்பு வாசிக்கப்படுமுன் கணேஷுக்குக் குறைந்தபட்ச தண்டனையை விதிக்கும்படி அவரின் வழக்கறிஞர் எஸ்.முத்துவீரன் கேட்டுக்கொண்டார். ஆனால், கணேஷின் செயல் கொடூரமானது என்பதால் அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கவேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

"கணேஷ் அன்றாட வருமானம் 20 ரிங்கிட்தான். அதை வைத்தே மனைவி, பிள்ளை, நீரிழிவால் கால்கள் அகற்றப்பட்ட தந்தை ஆகியோரை அவர் காப்பாற்றி வருகிறார்,' என்றார் திரு முத்துவீரன். டாக்சி ஓட்டுநர் ஏ.மோகன்ராஜ், 42, தொழில்நுட்பர் எஸ்.எஸ்.சத்தியா, 26, ஆகிய இருவரும் இந்தக் குற்றச் செயலின்போது கணேஷுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மோகன்ராஜுக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டில் இருந்து சத்தியா விடுவிக்கப்பட்டார்.