கோலாலம்பூர்: ஒரே பாலின உறவில் ஈடுபட முயன்ற ஐந்து ஆடவர்களுக்கு மலேசியாவில் உள்ள சமய நீதிமன்றம் சிறைத் தண்டனை, பிரம்படி, அபராதம் விதித்ததாக ஊடகம், மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. மலேசியாவின் இஸ்லாமிய சட்டத்தின்கீழ் ஒரே பாலின உறவு சட்டத்துக்கு விரோதமானது.
ஆனால் இதுதொடர்பாக தண்டனை விதிக்கப்படுவது அரிது.
சிலாங்கூர் ஷரியா உயர் நீதிமன்றம் ஒரே பாலின உறவில் ஈடுபட முயன்றதற்காக நான்கு ஆடவர்களுக்கு ஆறு மாதச் சிறை, ஆறு பிரம்படிகள், 4,800 ரிங்கிட் அபராதம் விதித்ததாக மலாய்மொழி நாளிதழான ஹரியான் மெட்ரோ குறிப்பிட்டது.
இந்த வழக்கு தொடர்பில் ஐந்தாவது ஆடவருக்கு ஆறு மாதச் சிறை, ஆறு பிரம்படிகள், 4,900 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஐவரும் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள முயன்றதாக ஷரியா நீதிமன்ற நீதிபதி திரு முகம்மது அஸ்ரி முகம்மது தஹீர் தெரிவித்தார்.
ஒரே பாலின உறவில் ஈடுபட முயன்றதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரங்கானு மாநிலத்தில் இரு பெண்களுக்குப் பிரம்படி விதிக்கப்பட்டது.
ஒரே பாலின உறவில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து சில அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

