மகாதீர்: ஜோ லோவுக்காக வேறொரு நாட்டுடன் போரிடப் போவதில்லை

மகாதீர்: ஜோ லோவுக்காக வேறொரு நாட்டுடன் போரிடப் போவதில்லை

2 mins read

கோலாலம்பூர்: ஜோ லோ என்று அழைக்கப்படும் லோ டேகர் ஜோ தங்க அனுமதி வழங்கியிருக்கும் நாட்டுடன் மலேசியா போர் தொடுக்காது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். மலேசியா வலிமைமிக்க நாடல்ல என்று தமக்குத் தெரியும் என்றும் போரிடும் திட்டம் தமக்குக் கிடையாது என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

"நாங்கள் போருக்குச் செல்லலாம். ஆனால் தோற்பது உறுதி. அத்துடன் சேர்த்து ஜோ லோவும் எங்களுக்குக் கிடைக்கமாட்டார். நாங்கள் வலிமைமிக்க நாடல்ல என்பது எங்களுக்குத் தெரியும்.

"சிலர் எங்களிடம் கனிவாக நடந்துகொள்கின்றனர். வேறு சிலர் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. இந்த உண்மை நிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

ஜோ லோ தங்க அனுமதி வழங்கிய நாடு பற்றி அவர் செய்தி

யாளர்களிடம் தெரிவிக்கவில்லை.

மலேசியப் போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீது பாடோரின் கருத்துகளுக்கும் தமது கருத்துகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பற்றி டாக்டர் மகாதீர் பேசினார்.

"ஜோ லோ சைப்ரசில் இருப்பதாக அப்துல் ஹமீது பாடோர் கூறுகிறார். போலிஸ் படைத் தலைவர் என்கிற முறையில் அவர் அவ்வாறு கூறுகிறார். ஆனால் நான் போலிஸ் படைத் தலைவர் அல்ல. எனக்கும் அந்தப் பதவியைக் கொடுத்தால் அவரைப் போலவே பேசுவேன்.

ஜோ லோ கண்டுபிடிக்கப்பட்ட இடம் குறித்து அப்துல் ஹமீது பாடோர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் ஜோ லோவின் இருப்பிடம் குறித்து அவர் எப்போதும் என்னிடம் தெரிவிப்பதில்லை. அதுகுறித்து சில சமயங்களில் மட்டும் அவர் என்னிடம் தெரிவிப்பார்," என்றார் டாக்டர் மகாதீர்.

"ஜோ லோ குறித்து தகவல் பெற நாங்கள் கடுமையாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் தகவல் கிடைப்பது எளிதான காரியமல்ல. ஜோ லோ பல்வேறு கடப்பிதழ்களை வைத்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, தமது முக அமைப்பை அவர் பலமுறை மாற்றியமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக எங்களிடம் தகுந்த ஆதாரமில்லை," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.