மகாதீர்: பிரச்சினைகள் தீரும் வரை பதவியை கைவிட மாட்டேன்

மகாதீர்: பிரச்சினைகள் தீரும் வரை பதவியை கைவிட மாட்டேன்

2 mins read

மலேசியா எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வரை பிரதமர் பதவியில் இருந்து இறங்கப்போவதில்லை என்று டாக்டர் மகாதீர் (படம்) தெரிவித்துள்ளார்.

1எம்டிபி மூலம் இழந்த பில்லியன் கணக்கான பணத்தை மீட்பது, பொதுச் சேவையில் காணப்படும் லஞ்ச ஊழலை ஒழிப்பது, தப்பி ஓடிய வர்த்தகர் ஜோ லோவைக் கண்டுபிடித்துக் கொண்டு வருவது போன்றவை நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகள் என்று அவர் பட்டியலிட்டார்.

'ஃபைனான்ஷியல் டைம்ஸ்' சஞ்சிகைக்கு பிரதமர் மகாதீர் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் பதவி மாற்றம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அடுத்த ஆண்டு (2020) பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் இறங்குவார் என்று வெளியான செய்தி பற்றியும் செய்தியாளர் வின வினார். அவற்றுக்குப் பதில் அளித்த டாக்டர் மகாதீர், தாம் பதவியில் இருந்து இறங்குவதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்றார்.

"நாங்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளைப் பொறுத்து பதவி மாற்றம் இருக்கும்.

"நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட சில அனுபவம் என்னிடம் இருந்ததால் பதவியைக் கைவிடும் முன் இப்போதுள்ள நிதிப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்.

"பிரதமர் பதவிக்கு அவர்கள் என்னை நியமித்தபோதே நான் நிரந்தரமாக இந்தப் பதவியில் இருக்கமாட்டேன் என்று தெரிவித்திருந்தேன். முழுப் பதவிக் காலத்தையும் நானே முடித்துவிட மாட்டேன் என்பது அதற்குப் பொருள்," என்றார் டாக்டர் மகாதீர்.

தமக்குப் பிறகு பிரதமர் பதவியில் யாரை அமர்த்துவது என்பதில் பல தவறுகளை தாம் இதற்கு முன் இழைத்துவிட்டதால் இனியும் அதுபோன்றதொரு தவறு நேர்ந்துவிடாமல் இருக்க கவனமுடன் செயல்பட வேண்டிய அவசியம் தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க தாம் உறுதி அளித்திருப்பதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.

தமது வழிகாட்டுதலில் வளர்ந்த அப்துல் அகமது படாவியும் நஜிப் ரசாக்கும் பிரதமர் பதவி ஏற்றது தமக்கு ஏமாற்றத்தைத் தந்ததாக திரு மகாதீர் சொன்னார்.

மகாதீர் விலகியதும் படாவி 2003ஆம் ஆண்டு பிரதமர் ஆனார். படாவி பதவி இறங்கிய பின்னர் 2009ஆம் ஆண்டில் நஜிப் பிரதமர் பொறுப்புக்கு வந்தார்.