வாஷிங்டன்: அமெரிக்காவும் சீனா வும் முதற்கட்ட ஒப்பந்தத்தில், ஒன்று மற்றதற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இணக்கம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட ஒப்பந்தம் இன்னமும் முடிவாகவில்லை.
மேலும் இதற்கு முன்பு முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தோல்வி அடைந்ததுபோல இப்போதும் இந்த ஒப்பந்தம் தோல்வியடையலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ப்பட்டால் வரியைக் குறைக்க அதிபர் டிரம்ப் கடப்பாடு தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவும் சீனாவும் வரியைக் குறைக்க முன்வந்திருப்பது இதுவே முதல் முறை.
அமெரிக்கா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 360 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சீனாவுக்கு எதிராக மேலும் வரி விதிக்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் கைவிட்டார்.
அமெரிக்காவின் வர்த்தக கோரிக்கைகளை சீனா ஏற்கவில்லையென்றால் மேலும் வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் வரியைக் குறைக்க இரு நாடுகளும் முன்வந்துள்ளதால் நேற்று பங்குச் சந்தையில் பங்குகள் சிறிதளவு ஏற்றம் கண்டன.

