லா பாஸ்: பொலிவியாவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக சிறு நகரத்தின் மேயர் ஒருவரை அவர்கள் கொடூரமாகத் தாக்கி யுள்ளனர்.
வின்டோ நகரத்தின் மேயரான பாட்ரிசியாவை ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருவில் இழுத்துச் சென்று அவர் முகத்தில் வண்ணச் சாயங்களை ஊற்றி, அவரது தலைமுடியையும் வெட்டிவிட்டனர்.
மேயர் பாட்ரிசியா அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களில் இருவர் கொல்லப்படுவதற்கு இவர் காரணமாக இருந்தார் என்று கூறியும் அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
'கொலைகாரி', 'கொலைகாரி' என்று முழக்கமிட்ட முகமூடி அணிந்த பலர் காலணியில்லாமல் மேயரைத் தர தரவென்று இழுத்துச் சென்றனர். பின்னர் மண்டியிட வைத்து அவரது தலைமுடியை வெட்டி அவர் மீது சிவப்பு சாயத்தை ஊற்றினர். பின்னர் மேயர் பாட்ரிசியா ஆர்க்கியை அவர்கள் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மேயரின் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் குறித்து அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையிலான மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை மூன்று பேர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

