மாணவர் மரணம்; பதற்றம்

மாணவர் மரணம்; பதற்றம்

2 mins read
015a5d79-3fac-408f-b96b-29200a5086c6
ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையான ஆயுதங்களுடன் இருப்பதாகவும் அவர்கள் அதிகாரிகள் மீது செங்கற்களை வீசித் தாக்கியதாகவும் கூறி போலிசார் எச்சரிக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

ஹாங்காங்கில் வார இறுதி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 8) மரணமடைந்தார்.

ஹாங்காங் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் சோவ் சே லோக் தலையில் ஏற்பட்ட காயங்களால் மரணமடைந்தார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஹாங்காங்கில் நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர் லோக்குக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அதுவும் கலவரமாகிப்போனது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையான ஆயுதங்களுடன் இருப்பதாகவும் அவர்கள் அதிகாரிகள் மீது செங்கற்களை வீசித் தாக்கியதாகவும் கூறி போலிசார் எச்சரிக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்டனர். இன்று போலிசார் வெளியிட்ட அறிக்கையில், அதிகாரிகள் மிகுந்த ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், போக்குவரத்தை நிறுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்று கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத் தலைவர் வெய் ஷை, பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் திரு சோவின் மரணத்தை அறிவித்தார். இதையடுத்து அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தவும் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

"போலிசார் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களால் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே நுழைய முடியாததை காெணாளியில் பார்த்தோம். ஆம்புலன்ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நடந்து சென்று மாணவரை மீட்டனர். இதனால் இருபது நிமிடம் காலதாமதமானது," என்று திரு வெய் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இது குறித்து அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.