இரவு முழுவதும் கணினி விளையாட்டு; இளைஞர் மரணம்

இரவு முழுவதும் கணினியில் விளையாடிக்கொண்டிருந்த 17 வயது இளைஞர், சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 

தாய்லாந்தைச் சேர்ந்த பியாவாட் ஹரிகுன், பள்ளி விடுமுறையின்போது பொழுதுபோவதற்காக அறையைவிட்டு வெளியேறாமல் கணினி விளையாட்டுகளிலேயே ஈடுபட்டு வந்தார். 

இரவு முழுவதும் கண்விழித்து விளையாடியதுடன் பகல் வேளையிலும் சன்னல் திரைச்சீலைகளை மூடிவிட்டு தொடர்ந்து கணினியில் இளைஞர் நேரத்தைச் செலவழித்ததாக அவரது பெற்றோர் குறிப்பிட்டனர்.  

உணவைக்கூட அவரது அறைக்குக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டிய நிலை பெற்றோருக்கு. இந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறு பலமுறை கூறியும் இளைஞர் கணினி விளையாட்டை நிறுத்தவில்லை.

திங்கட்கிழமை காலையில் இளைஞரின் படுக்கை அறைக்குச் சென்ற அவரது தந்தை, மகன் நாற்காலியில் சரிந்து கிடந்ததைக் கண்டார். 

பலமுறை எழுப்ப முயன்றும் இளைஞர் சுயநினைவுக்கு வரவில்லை. பின்னர் இளைஞரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கணினி விளையாடியதால் ஏற்பட்ட பக்கவாதமே மரணத்திற்குக் காரணம் என்று பிரேத பரிசோதனையில் மருத்துவ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மகன் படிப்பில் கெட்டிக்காரன் என்றாலும் இவ்வாறு தொடர்ந்து விளையாட்டில் மூழ்கியிருப்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்ததாக இளைஞரின் தந்தை குறிப்பிட்டார். 

பிள்ளைகளின் விளையாட்டு நேரத்தைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றும் தமது மகனின் மரணம் மற்ற பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்றும் அவர் கூறினார்.