ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

ஹாங்காங்: அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளி தொடர்பில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களான மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர். 

ஏற்கெனவே வார இறுதி ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங் நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

இந்த நிலையில் போலிசாரின் கைது நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்க வைத்துள்ளது.

ஹாங்காங் தலைமை நிர்வாகி பதவி விலகுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஹாங்காங்கும் பெய்ஜிங்கும் தலை சாய்ப்பதாக இல்லை. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததால் மாணவர்களும் கொதிப்படைந்துள்ளனர்.

நேற்று 24வது வாரமாக போராட்டம் நடைபெற்றது. 

கைது செய்யப்பட்ட ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களில் மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு போலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.