முதல் சம்பவம்; பாலியல் உறவு மூலம் டெங்கி

மேட்ரிட்: பாலியல் உறவு மூலம் டெங்கிக் காய்ச்சல் பரவியுள்ளதை ஜெர்மன் சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அன்று உறுதி செய்துள்ளனர்.

கொசுக்கள் மூலமாக மட்டும் டெங்கி பரவுவதாக நம்பப்பட்ட நிலையில் முதல் முறையாக பாலியல் உறவுகொண்ட ஓர் ஆடவர் மூலம் டெங்கி பரவியது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேட்ரிட் நகரத்தைச் சேர்ந்த 41 வயது ஆடவர் கியூபாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது கொசுக்கள் மூலம் டெங்கி தொற்றியது.

இந்த நிலையில் மற்றோர் ஆடவருடன் அவர் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதால்  அந்த ஆடவரையும் டெங்கி தொற்றியது என்று மேட்ரிட் வட்டார பொது சுகாதாரத் துறையின் அதிகாரியான சுசானா ஜிமேனஸ் கூறினார்.

செப்டம்பரில் இந்த மனிதர்கள் மூலம் டெங்கி தொற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வெளிநாட்டுக்குப் பயணம் செல்லாத ஒருவருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். 

பின்னர் விசாரணையில் கியூபா சென்ற ஆடவரிடமிருந்து அவருக்கு டெங்கி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

தீவிரக் காய்ச்சல், உடல் வலி போன்ற டெங்கிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அவரிடம் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

கியூபா சென்ற அவரது நண்பருக்கும் பத்து நாட்களுக்கு முன்பு இதே போன்ற டெங்கிக் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டன. தற் போது அவர் குணமடைந்துள்ளார்.