தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

2 mins read
72aa1cd3-5b9d-4482-aec4-b637139cb6aa
மலேசியாவின் கல்வி துணை அமைச்சர் டியோ நி சிங். படம் மலே மேய் -

மலேசியாவில் செயல்படும் தாய்மொழிப் பள்ளிகள், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என அறிவிக்கக் கோரும் நீதிமன்ற நடவடிக்கை இனி இருக்காது எனத் தாம் நம்புவதாக அந்நாட்டின் கல்வி துணை அமைச்சர் டியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசமைப்பு சட்டப்படி சரியா என்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் முகம்மது கைருல் அசாம் அப்துல் அசிஸ் தாக்கல் செய்த மனுவை புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து துணை அமைச்சர் டியோ மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

"பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் பலமுறை கூறியதுபோல, நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கு தாய்மொழிப் பள்ளிகள் முக்கிய சொத்தாக இருக்க வேண்டும்," என நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த மாதம் 23ஆம் தேதி திரு கைருல் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில், 1996 கல்விச் சட்டப் பிரிவு 17க்கும் 28க்கும் திருத்தம் கொண்டுவந்தது அரசமைப்பு சட்டப்படி செல்லாது என்று கூட்டரசு நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். தேசிய வகை தமிழ், சீனப் பள்ளிகள் தத்தம் மொழிகளைப் பயன்படுத்துவது, மலாய்மொழிதான் தேசிய மொழி என்று கூறும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 152(1)க்கு எதிரானது என்பது அவரது வாதம்.

இந்த வழக்கு குறித்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி அசஹார் முகம்மது, தாய்மொழிப் பள்ளிகளை அமைக்கவும் கல்விச் சட்டங்களை இயற்றவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக கூறினார். தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவதற்கு சவால் விடுக்க, கூட்டரசு நீதிமன்றம் ஒரு தளமாக இருக்காது என்றும் அவர் சொன்னார். அரசமைப்பு சட்டம் தொடர்பாக சிக்கலான மனுக்களை உயர்நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக திரு கைருலின் வழக்கறிஞர் ஷஹருடின் அலி பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.