ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது

ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து ஆடவர் ஒருவர் மீது தீ மூட்டப்பட்டதாக ஹாங்காங் போலிஸ் நேற்று தெரிவித்தது.

இச்சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

பச்சை நிற டீ-சட்டை அணிந்திருக்கும் ஆடவர் ஒருவர், நடைபாலம் ஒன்றில் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அக்காணொளிகள் காட்டின. ஆனால், இந்த காணொளிகள் உண்மைதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.

கறுப்பு நிற ஆடை, முகமூடி அணிந்த மற்றோருவர், அந்த ஆடவர் மீது திரவத்தை ஊற்றி, அவர் மீது தீ மூட்டினார். 

அதையடுத்து, மக்கள் கூட்டம் கூடிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர் தாம் அணிந்திருக்கும் டீ-சட்டையை அவிழ்க்க போராடினார்.

“பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்,” என்று செய்தியாளர்களிடம் போலிஸ் பேச்சாளர் ஜான் சே கூறினார்.

மத்திய வர்த்தக வட்டாரத்திலிருந்து ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தூரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, அருகில் உள்ள ரயில் நிலையத்தை முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகவும் அச்செயலைக் கண்டிக்க அந்த ஆடவர் அவர்களைத் துரத்தியதாகவும் தலைமை கண்காணிப்பாளர் சே சொன்னார்.

“அதையடுத்து, அவர் தாக்குதலுக்கு உள்ளானதோடு அவர் மீது தீ மூட்டப்பட்டது,” என்றார் தலைமை கண்காணிப்பாளர் சே.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அம்மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அந்த ஆடவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால், ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளர்களை அவர் குறைகூறியதாகவும் அதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்குப் பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.