வியட்னாமில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஆஸ்திரேலியர்

வியட்னாமில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஆஸ்திரேலியர்

1 mins read
65b90998-257b-4c26-b09d-2b8bf28940e8
வியட்னாமுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலியரான சாவ் வான் காம், 70 , உட்பட மூவர் மீது 11.11.2019 அன்று ஹோ சி மின் நகர நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. படம்: ஏஎப்பி -

ஹனோய்: வியட்னாமுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலியரான சாவ் வான் காம், 70 (படம்), உட்பட மூவர் மீது நேற்று ஹோ சி மின் நகர நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

நுயென் வான் வியன், 48, டிரான் வான் குயென், 20, என்ற இரு வியட்னாமியர்களோடு சேர்ந்து திரு காம் வியட்னாம் அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறி, இவ்வாண்டு ஜனவரியில் அம்மூவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஆட்சிக் கவிழ்ப்புக் குற்றச்சாட்டு பின்னர் பயங்கரவாதக் குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது.

தடை செய்யப்பட்ட ஜனநாயக எதிர்க்கட்சியான வியட் டானுடன் இணைந்து செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக 'மனித உரிமைகள் கண்காணிப்பு' அமைப்பு தெரிவித்தது.

வியட்னாமில் பிறந்தவரான திரு காம், இளம் வயதிலேயே ஆஸ்திரேலியா சென்றுவிட்டார் என்றும் அவர் சிட்னியில் உள்ள வியட் டான் அமைப்பின் உறுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது.

அம்மூவர் மீதான வழக்கு விசாரணை நேற்றுக் காலை 8.30 மணிக்குத் தொடங்கிய நிலையில், பிற்பகலிலேயே தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

குற்றமிழைத்தது உறுதியானால் அவர்கள் மூவருக்கும் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. பொது விசாரணை என்றபோதும் மக்கள் குவிவதைத் தடுக்கும் நோக்கில் நீதிமன்றத்தைச் சுற்றி போலிசார் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.