முக்குளிப்பாளர்களில் ஒருவரின் உடலைக் கண்டுபிடித்த மீனவர்கள்

முக்குளிப்பாளர்களில் ஒருவரின் உடலைக் கண்டுபிடித்த மீனவர்கள்

1 mins read

ஜகார்த்தா: சிங்கப்பூரர் ஒருவர் உட்பட முக்குளிப்பாளர்கள் மூவர் காணாமல் போன நிலையில் சுமத்ரா தீவின் லம்புங் பகுதியை ஒட்டிய கடற்பகுதியில் அவர்களுள் ஒருவரின் உடலை இந்தோனீசிய மீனவர்கள் கண்டுபிடித்தனர்.

முக்குளிப்பு உடை அணிந்த நிலையில் அவர் இருந்ததையும் அவருக்கு அருகே முக்குளிப்பு உபகரணம் ஒன்று இருந்ததையும் மீனவர்கள் கண்டதாக இந்தோனீசிய தேடி மீட்கும் படையின் பேச்சாளர் யூசுஃப் லத்தீப் கூறினார்.

"காணாமல் போன முக்குளிப்பாளர்களில் ஒருவரது உடலே அது என உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் லம்புங்கில் இருந்து ஜகார்த்தாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது," என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் சொன்னார்.

அந்த முக்குளிப்பாளர் எந்த நாட்டவர் எனத் தெரியவில்லை என்றும் கிழக்கு ஜகார்த்தா போலிஸ் மருத்துவமனையில் அவரை அடையாளம் காணும் பணி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 3ஆம் தேதி வெளிநாட்டவர் அறுவர் இரு பிரிவுகளாக முக்குளிக்கச் சென்றனர். அவர்களுள் ஒரு பிரிவினர் மட்டும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து கடல் பரப்புக்குத் திரும்பினர். சிங்கப்பூரர் வாங் பின் யாங்கும் சின் சியூ தாவ், டியன் யூ என்ற சீனர்கள் இருவரும் காணாமல் போயினர்.