ஆடவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம்

தாங்க முடியாத காதுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இளைஞரின் வலது காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பமே குடியிருந்தது மருத்துவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் குவாண்டாங் மாநிலத்தில் உள்ள ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான எல்வ். காது வலிப்பதைப் பற்றி தனது குடும்பத்தாரிடம் கூறினார் எல்வ். காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சி இருந்ததை  அவரது குடும்பத்தார் கண்டதையடுத்து அங்குள்ள சானே மருத்துவமனைக்குச் சென்றார் அவர்.

அவரைப் பரிசோதித்த காது, மூக்கு, தொண்டை நிபுணரான ஸோங் யிஜின்  எனும் மருத்துவர், எல்வின் காதுக்குள் பத்துக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி குஞ்சுகள் இருந்ததைக் கண்டார்.

அங்கு அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த மருத்துவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட அதன் குட்டிகளுடன் இருந்தது. அவற்றை இடுக்கி மூலம் மருத்துவர் வெளியே எடுத்தார்.

காதில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் சிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் வீடு திரும்பினார் அவர். 

சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைக்கும் பழக்கம் எல்வுக்கு இருந்ததால், உணவைச் சாப்பிட வரும் கரப்பான் பூச்சி காதுக்குள் சென்றிருக்கலாம் என்றார் மருத்துவர்.

 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity