நேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்

பங்ளாதேஷின் சிட்டகாங் எனும் துறைமுக நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு ரயிலும், தலைநகர் டாக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலும் டாக்காவிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 16 பேர் பலியாகினர், சுமார் 60 பேர் காயமடைந்தனர்.

மோதலின் தாக்கத்தால் சிட்டகாங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலின் மூன்று பெட்டிகள் முற்றிலுமாகச் சிதைந்தன. 

ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கி காயமடைந்தவர்களை மீட்பதற்காக ராட்சத பாரந்தூக்கிகள் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டன. 

ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பலரும் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலை வேளையில் விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் சிக்கிய ரயில்களில் ஒன்று போக்குவரத்து சமிக்ஞையை உடைத்திருக்கக்கூடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் பங்ளாதேஷில் 202 ரயில் விபத்துகள் நிகழ்ந்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.