மோசமாகிவரும் ஆஸ்திரேலிய புதர்த் தீ; சிட்னியிலும் பாதிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் பரவி வரும் புதர்த் தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ வேகமாகப் பரவுவதால், அவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற காலம்கடந்து விட்டது என்று அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து அவர்கள், புகலிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்சில் 11 அபாய எச்சரிக்கைகளை அதிகாரிகள் விடுத்துள்ளனர். அந்த மாநிலத்தில் 78க்கும் அதிகமாக இடங்களில் தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிவதால் நிலைமை மிக மோசமாகியுள்ளது. 

தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கு ராணுவமும் உதவும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

மக்கள் அபாய நிலையில் உள்ளதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிட்னியின் வடக்குப் பகுதியில் நேற்று பிற்பகலில் புதர்த் தீ ஏற்பட்டதால் சில குடியிருப்பாளர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் அவதியுற்றனர்.

நேற்று முன்தினம் சிட்னியில் “பேரழிவு” எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

முதன்முறையாக, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் மிக மோசமான தீ எச்சரிக்கையை எதிர்நோக்குகின்றன. 

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சிட்னி, மிகப் பெரிய பரப்பளவிலான புதர் பகுதியைக் கொண்டுள்ளது. இதன் பெரும்பகுதி, அண்மைய மாதங்களில் போதிய மழை பெய்யாததில் தொடர்ந்து வறண்டு கிடக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் வெப்பமான, வறண்ட கோடைகாலங்களில் புதர்த் தீ வழமையானது என்றாலும், கோடை உச்சத்திற்கு முன்பே தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிக வெப்பநிலையும் குறைந்த காற்றின் ஈரப்பதமும் பலமான காற்றும் மேலும் தீ உருவாவதற்கும் வேகமாகப் பரவுவதற்கும் வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீயால் 2,000 ஹெக்டர் அளவுக்கு இருந்த கோலா கரடி சரணாலயம் (koala sanctuary) பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கு முன்பாக நியூ சௌத் வேல்ஸில் நீடித்த வறட்சியை, அதன்பின் பெய்த கனமழை கொஞ்சம் தீர்த்து வைத்தது. ஆனால், இந்தக் `காட்டுத் தீ’ சம்பவங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று மக்களும் அதிகாரிகளும் அஞ்சுகின்றனர். கடுமையான மழை பெய்தால்தான் இந்த நிலை சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.