ரசாயனத் தாக்குதல்: பாலர் பள்ளியில் 51 பிள்ளைகள் காயம்

ரசாயனத் தாக்குதல்: பாலர் பள்ளியில் 51 பிள்ளைகள் காயம்

1 mins read
0ea1768c-9be3-42de-b7ff-4fe1d3ed27da
பாலர் பள்ளிச் சுவரின்மீது ஏறி மாணவர்களின்  மேல் 'சோடியம் ஹைட்ராக்சைட்' ரசாயனத்தை சந்தேக நபர் பாய்ச்சியதாக யுனான் மாநிலத்தின் கையுவேன் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: ஏஎஃப்பி -

பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவின் பாலர் பள்ளிக்குள் திடீரென புகுந்த ஓர் ஆடவர், அரிப்பை ஏற்படுத்தும் திரவத்தால் 50க்கும் அதிகமானோரைக் காயப்படுத்தியுள்ளார். காயமடைந்தோரில் பெரும்பாலானோர் சிறார்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் நேற்று (நவம்பர் 12ஆம் தேதி) தெரிவித்தனர்.

சந்தேக நபரான 23 வயது கோங், பாலர் பள்ளிச் சுவரின்மீது ஏறி மாணவர்களின் மேல் 'சோடியம் ஹைட்ராக்சைட்' ரசாயனத்தைப் பாய்ச்சியதாக யுனான் மாநிலத்தின் கையுவேன் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் திங்கட்கிழமை பிற்பகல் 3.35 மணிக்கு நேர்ந்ததாக அதிகாரிகள் வெய்போ தளத்தின்மூலம் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 குழந்தைகளும் மூன்று ஆசிரியர்களும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆவதற்கு முன்பே போலிசார் கோங்கைக் கைது செய்தனர்.

"சிறு வயதில் அவரது பெற்றோர் விவாகரத்து செய்ததால் குடும்ப அரவணைப்பின்மையால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்," என்றனர் உள்ளூர் அதிகாரிகள்.