சுடச் சுடச் செய்திகள்

‘இலக்கிய குரிசில்’ முனைவர் மா.இராமையா காலமானார்

மலேசிய இலக்கிய முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவரான ‘இலக்கிய குரிசல்’ முனைவர் மா.இராமையா தமது சொந்த ஊரான ஜோகூர் மாநிலம், தங்கா நகரில் இன்று (நவம்பர் 13) காலை காலமானார். அவருக்கு வயது 86. 

இம்மாதம்  9ஆம் தேதி அவரது இலக்கியப் பணிகளைப் போற்றி மலேசிய இலக்கிய உலகம் கோலாலம்பூரில் விழா எடுத்தது. விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் மிகுந்த நினைவாற்றலுடன் மலேசிய இலக்கியம் பற்றி உரையாற்றினார். 

1933ல் பிறந்த திரு இராமையா 1946ஆம் ஆண்டு ‘காதல் பரிசு’ என்ற முதல் கதையை எழுதியதன் வழியாக மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகில் அடியெடுத்து வைத்தார். 

இவர் 9 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுதிகள் , ஒரு கவிதைத் தொகுதி, 2 கட்டுரைத் தொகுதிகள், தன்வரலாறு ஆகியவற்றை எழுதியுள்ளார். 

மலேசியாவில் நடந்த சிறுகதைப் போட்டிகளில் கலந்து அதிகத் தங்கப் பதக்கங்களை வென்றவரும் இவரே.

தமிழவேள் கோ.சாரங்கபாணிமேல் பற்றுகொண்டு தொடர்ந்து தன் சொந்தச் செலவில் ஜோகூரிலுள்ள தங்கா நகரில் விடாமல் தமிழர் திருநாளை நடத்திவந்தவர்.

‘இலக்கியக் குரிசில்’ என்ற சிற்றிதழையும் சில ஆண்டுகள் மாத இதழாக நடத்தி வந்தார்.

இவர் பெற்ற பரிசுகளின் பட்டியல் மிக நீண்டது.  

தமிழ் முரசு சிறுகதைப் போட்டியில் பல முறை பரிசு வென்றவர். ‘மலேசிய இலக்கிய வரலாறு’ மற்றும் ‘மலேசிய இலக்கியக் களஞ்சியம்’ ஆகிய இவரது ஆய்வு நூல்கள் மலேசிய-சிங்கப்பூர் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆவணங்களாகும். இவருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் இலக்கியத் துறையில் ‘முனைவர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது.  

சிறந்த சொற்பொழிவாளர். தனது கதை மாந்தர்களுக்கு நல்ல இனிய தமிழ்ப்   பெயர்களைச் சூட்டி, படிப்போர் கவனத்தைக் கவர்ந்தவர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி போன்ற புனைபெயர்களிலும் எழுதியவர்.

அன்னாரின் நல்லுடல் நாளை (நவம்பர் 14) காலை 10.30 மணிக்கு தங்காவிலுள்ள, தங்கா ஜெயா இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity