சுடச் சுடச் செய்திகள்

‘ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்’

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியாவின் ‘ரோக் யுகேஸ்’ இசைக்குழுவின் கித்தார் கலைஞர் அகேல் ஸைனல் கொல்லப்பட்டதை மலேசியாவின் புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் துணைத் தலைமை இயக்குனர் அயூப் கான் மைதீன் உறுதிப்படுத்தினர்.

போலிசாருக்குக் கிடைத்த தகவலின்படி வான் முகம்மது அகில் வான் ஸைனல் அபிடின், 39, எனும் உண்மையான பெயர் கொண்ட அந்த நபரைக் குறிவைத்து சிரியாவில் ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“கடந்த மார்ச் மாதம் பாக்ஹவுஸ்ஸில் உள்ள அகிலின் வீட்டில் விமானப் படைகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியபோது அவர் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாத கும்பலின் முக்கிய தலைவர்களாக இருந்த இதர நான்கு மலேசியர்களும் கொல்லப்பட்டனர்,” என அயூப் கான்  கூறினார்.

மேலும் அகிலின் மனைவி, அவரது இரண்டு, மூன்று வயதுடைய இரு குழந்தைகளும் பெல்ஜியத்தைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாகவும் திரு அயூப் கான் கூறினார்.

மற்றொரு முக்கிய பயங்கரவாதியான முகம்மது ரஃபி உடின், 53, கடந்த ஜனவரியில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ரஃபி, கே.எம்.எம். எனப்படும் மலேசிய முஜாஹிதீன் குழுவின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஆவார்.