ஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை

ஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை

1 mins read
d4f96ac5-c9ba-4a0a-bb1b-1f425a142c1e
ஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். படம்: ஏஎஃப்பி -

ஆசிய நிதி மையமாகத் திகழும் ஹாங்காங்கின் பல இடங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக முடங்கிப்போயுள்ளன.

சற்றும் தணியாத ஆர்ப்பாட்டக்காரர்கள், முக்கிய சாலைகளை வழிமறித்ததோடு நகரம் முழுவதும் போலிசுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து முடங்கியதோடு பல பள்ளிகள் நேற்று மூடப்பட்டன.

மத்திய நிதி வட்டாரத்தில் ஒன்று திரளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நேற்று நண்பகல் வாக்கில் வீதிகளில் குவிந்த நூற்றுக்கணக்கான அலுவலகப் பணியாளர்கள், அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

பல பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். சாலைகளில் செங்கற்கள் சிதறிக் கிடந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பெரும் எண்ணிக்கையில் வந்த கலகத் தடுப்பு போலிசார், மூர்க்கத்தனமாக நடந்துகொண்டோரைக் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கைது செய்யப்பட்டோரை விடுவிக்குமாறு மிரட்டினர்.

ஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர்.

ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகம் உட்பட 11 உயர் கல்வி நிலையங்களில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கைகலப்பில் பலர் காயமடைந்தனர். இதனால் வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

கௌலூன் தோங் எனும் பகுதியில் உள்ள 'ஃபெஸ்ட்டிவல் வாக்' கடைத்தொகுதியில் அமைந்திருக்கும் கிறிஸ்மஸ் மரத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதங்களாக போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஹாங்காங் அரசு அடிபணியாமல் உள்ளது.