மாணவர்களின் உபகாரச் சம்பள நிதியைக் கையாடியவருக்கு 584 ஆண்டு சிறை, 146 பிரம்படிகள்

மாணவர்களின் உபகாரச் சம்பள நிதியைக் கையாடியவருக்கு 584 ஆண்டு சிறை, 146 பிரம்படிகள்

2 mins read
34643c7b-c9a1-4597-8c81-d668f9832655
முகமது ஹனாஃபி இஸ்மாயில் எனும் 31 வயது முன்னாள் நிர்வாகி மீதான குற்றச்சாட்டுகள், வாத ஆதாரங்கள் ஆகியவற்றை மலாக்கா அமர்வு நீதிமன்றத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வாசித்துக் காட்டிய நீதிபதி முகமது நாசிர் நோர்டின் இந்தத் தீர்ப்பை வழங்கினார். படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவில் பள்ளி மாணவர்களின் 2.4 மில்லியன் ரிங்கிட் உபகாரச் சம்பள நிதியை கையாடல் செய்ததற்காக முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு 584 ஆண்டு சிறைத் தண்டனையும் 146 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

முகமது ஹனாஃபி இஸ்மாயில் எனும் 31 வயது முன்னாள் நிர்வாகி மீதான குற்றச்சாட்டுகள், வாத ஆதாரங்கள் ஆகியவற்றை மலாக்கா அமர்வு நீதிமன்றத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வாசித்துக் காட்டிய நீதிபதி முகமது நாசிர் நோர்டின் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக 'ஹரியான் மெட்ரோ' செய்தி குறிப்பிட்டது.

நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு பிரம்படி என்ற வீதத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஏககாலத்தில் நிறைவேற்றப்படும். அதன்படி அவருக்கு மொத்தம் நான்காண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

உபகாரச் சம்பள நிதிக்கு பொறுப்பாளராக இருந்த இஸ்மாயில், அந்தப் பணத்தைக் கையாடினார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வரையிலான காலத்தில் கட்டம்கட்டமாக 2.404 மில்லியன் ரிங்கிட்டை அவர் கையாடினார்.

ஆயர் கெரோவில் உள்ள பங்குனான் கோத்தா செமர்லாங்கில் உள்ள Tapem அமைப்பின் நிதிப் பிரிவில் இந்தக் குற்றச்செயல் நிகழ்ந்தது.

14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படக்கூடிய குற்றவியல் சட்டப் பிரிவு 408ன் கீழ் இஸ்மாயில் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில் மலேசியாவின் ஊழலுக்கு எதிரான ஆணையத்தின் அரசுத்தரப்பு வழக்கறிஞர் இர்வான் ஷா அப்துல் சமாட் வாதாடினார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity