ஆஸ்திரேலியப் புதர்த் தீ: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவை உலுக்கி வரும் புதர்த் தீயில் இதுவரை நான்கு பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 58 வயது ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக அந்தப் பகுதி மிக மோசமான புதர்த் தீயால் பாதிக்கப்பட்டிருந்தது.

நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 120 இடங்களில் புதர்த் தீ ஏற்பட்டிருப்பதாகவும் அவற்றை அணைக்க அதிகாரிகள் கடுமை யாகப் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவிலும் புதர்த் தீ ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய அளவுக்குத் தீமூட்டியதாக 16 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவன் தீமூட்டியதில் பிரிஸ்பனுக்கு வடக்கில் உள்ள யேப்பூன் நகரில் 14 வீடுகள் எரிந்து சாம்பலானதாக போலிசார் கூறினர். புதர்த் தீ இன்னும் மோசமடையக்கூடும் என ஆஸ்திரேலியத் தீயணைப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் கூறியதாகவும் தீயணைப்புப்  படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால் தாங்கள் கூறியதை அரசாங்கம் புறக்கணிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை குறைந்தது 300 வீடுகள்  புதர்த் தீயில் சேதமடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதர்த் தீயை அணைக்க நியூசிலாந்து தீயணைப்புப் படையினரும் உதவு கின்றனர்.