ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை

மின்ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற இருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து, இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவிலும் நடைபாதைகள், நடைபாலங்கள் மற்றும் சாலைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை விதிக்கப்படவிருக்கிறது.

தடை அமலுக்கு வந்தபின் அங்குள்ள சைக்கிளோட்டப் பாதைகளில் மட்டுமே மின்ஸ்கூட்டரை ஓட்ட முடியும். மின்ஸ்கூட்டரைப் பயன்படுத்துவோர் நடைபாலங்களைக் கடக்கும்போது தங்களது வாகனங்களைக் கையில் எடுத்துச் செல்லவேண்டும்.

ஜகார்த்தா போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் சியாஃபிரின் லிபுட்டோ இந்த விவரங்களைத் தெரிவித்ததாக ‘தி ஜகார்த்தா போஸ்ட்’  நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதசாரிகளின் பாதுகாப்பையும் சௌகரியத்தையும் உறுதிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக திரு சியாஃபிரின் கூறியுள்ளார்.

‘கார் இல்லா’ நாளாக அனுசரிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்ஸ்கூட்டருக்கும் தடை விதிக்கப்படும். அத்துடன், மின்ஸ்கூட்டர் வாடகைக்கு விடப்படும் நேரமும் குறைக்கப்படவுள்ளது.

சொந்தமாக மின்ஸ்கூட்டர் வைத்திருப்போருக்கும் அதை வாடகைக்கு விடும் ‘கிராப்வீல்ஸ்’ நிறுவனத்திற்கும் இந்தத் தடை பொருந்தும். ‘கிராப் இந்தோனீசியா’ நிறுவனம் ‘கிராப்வீல்ஸ்’ என்ற பெயரில் மின்ஸ்கூட்டர்களை வாடகைக்கு விட்டு வருகிறது.

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இதேபோல், மோட்டார்சைக்கிள்களையும் நடைபாதையில் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity