குழந்தையைக் கொன்றதாக தாய் உட்பட அரசாங்க ஊழியர் இருவர் மீது குற்றச்சாட்டு

குழந்தையைக் கொன்றதாக தாய் உட்பட அரசாங்க ஊழியர் இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
993fe8da-0664-458d-8b15-71c2d0a179f6
குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது இவ்விரு பெண்களும் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டவில்லை என்று கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசிய இஸ்லாமிக் மேம்பாட்டுத் துறையைச் (Jakim) சேர்ந்த ஒரு பெண், கல்வி அமைச்சில் பணிபுரியும் மற்றொருவர் ஆகிய இருவர் மீதும் 23 மாதக் குழந்தையை இம்மாதத் தொடக்கத்தில் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இறந்துபோன குழந்தையின் தாயான நோர் ஐசியா முகமது யூனூஸ் எனும் 37 வயது பெண், அவருடன் வசிக்கும் 33 வயது நூர் ஐசியா இப்ராகிம் ஆகிய இருவர் மீதும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்விரு பெண்களும் முகம்மது அல்ஃபாதெ ஹம்டி எனும் அந்தக் குழந்தைக்கு செப்டம்பர் மாத நடுவிலிருந்து இம்மாதம் நான்காம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் மரணத்தை விளைவித்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்கள் நிறைந்திருந்த நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது இவ்விரு பெண்களும் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டவில்லை என்று கூறப்பட்டது.

இவ்விரு பெண்களையும் மனநலச் சோதனைக்கு அனுப்புமாறு அவர்களது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அதற்கான ஆணையை மாஜிஸ்திரேட் ஷா விரா அப்துல் ஹலிம் பிறப்பித்தார்.

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளின்படி குழந்தையின் உடல் முழுவதும் 89 காயங்கள், வீக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவனிடம் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்
குழந்தைகொலை