இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்

இலங்கையில் புதிய அதிபரைத் தேர்ந்து எடுக்க இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது.

சஜித் பிரேமதாச (ஐக்கிய தேசிய கட்சி), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே (இலங்கை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர்), அனுரா குமார திசநாயகே (ஜனதா விமுக்தி பெரமுன), மகேஷ் சேனநாயகே (தேசிய மக்கள் கட்சி) உட்பட மொத்தம் 35 பேர் அதிபர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

பதவியில் இருக்கும் அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர், முன்னாள் அதிபர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக  இம்முறை அதிபர் தேர்தல் அமைந்துள்ளது.

வாக்களிப்பு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். மொத்தம் 12,854 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.  

2018 தேர்தல் பதிவேட்டின்படி மொத்தம் 15,992,096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த 2015 அதிபர் தேர்தலைக் காட்டிலும் 47,606 அதிகம்.

முதன்முறையாக, 2,500க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்களிப்பு மையங்களில் மூன்று வரிசைகள் அமைக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்து இருக்கிறது. 

முக்கிய தலைவர்கள் வாக்களிப்பதைப் படம் எடுக்க ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நியாயமாக நடைபெறுகிறதா என்பதை உள்ளூர், வெளிநாட்டுத் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பர். ‘சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயல்’ எனும் அமைப்பு 4,000 தேர்தல் பார்வையாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.  

தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் 60,175 போலிசாரும் 8,080 குடிமைத் தற்காப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு முடிந்ததும் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். நாடு முழுவதும் 1,178 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கென 371 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிபர் தேர்தலுக்கு 7.5 பில்லியன் இலங்கை ரூபாய் (S$57 மில்லியன்) செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். 

தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ள அரசாங்க அதிகாரிகள் பாரபட்சமின்றி, நடுநிலைமையோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதனிடையே, இலங்கை செல்லும் தங்களது குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இலங்கையின் புதிய அதிபர் யார் என நாளைக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.