லண்டனில் ஹாங்காங் அமைச்சர் மீது தாக்குதல்; சீனா கண்டனம்

ஹாங்காங் நீதித்துறை அமைச்சர் தெரேசா செங் லண்டனில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதற்கு சீனாவும் ஹாங்காங் அரசாங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பல மாதங்களாக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அமைச்சர் ஒருவருக்கும் நேரடி வாக்குவாதம் நிகழ்ந்திருப்பது இதுவே முதன்முறை.

ஹாங்காங்கை சமரசத் தீர்வு, உடன்பாட்டு மையமாக பிரபலப் படுத்தும் முயற்சிக்காக லண்டன் சென்றிருந்தார் திருவாட்டி செங். அப்போது கிட்டத்தட்ட 30 ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு ‘கொலைகாரி’ என்றும் ‘அவமானம்’ என்றும் முழக்கமிட்டனர்.

திருவாட்டி செங்கிற்கு உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக ஹாங்காங் அரசாங்கம் தெரிவித்துள்ளது. திருவாட்டி செங் கீழே விழுந்து கிடப்பதைச் சம்பவம் தொடர்பான காணொளி காட்டுகிறது.

“இது திருவாட்டி செங் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்,” எனக் குறிப்பிட்டு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனது பேராளர்கள், நிறுவனங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்  என்றும் பிரிட்டிஷ் போலிசிடம் சீனா வலியுறுத்தி இருக்கிறது.

இதனிடையே, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நேற்று ஐந்தாவது நாளாகத் தொடர்ந்ததால் ஹாங்காங் நகரம் முடங்கியது. பல்கலைக்கழக வளாகங்களைச் சுற்றியும் சில நெடுஞ்சாலைகளிலும் மாணவர்கள் தடுப்புகளை அமைத்துள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் போலிஸ் திணறி வருகிறது.

இதனிடையே, பத்தாண்டுகளில் முதன்முறையாக பொருளியல் மந்தநிலையை ஹாங்காங் எதிர் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அதன் பொருளியல் 3.2% சுருங்கியதாக முதற்கட்ட மதிப்பீடுகள் கூறுகின்றன.