கோயில்களுடன் கூடிய 3,000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட்டுக்கு அருகில்  3,000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

அந்த நகரத்தின் பெயர் 'பசிரா'. இது பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது என்று கூறப்படுகிறது.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கோயிலில் தனித்துவம் வாய்ந்த புத்த சமயம் தொடர்பான சிலைகள் இருப்பது ஆய்வாளர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு இந்தோ-கிரேக்க நாணயங்கள், புத்தக் கோயில்கள், ஸ்தூபம், பானைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கிமு 326ல் அலெக்சாண்டர் தனது படையுடன்  பாகிஸ்தானின் 'ஸ்வாட்'டுக்குச் சென்று ஓடிகிராம் பகுதியில் நடந்த போரில் எதிரிகளைத் தோற்கடித்து 'பசிரா' என்ற சுவர் நகரத்தையும், ஒரு கோட்டையையும் கட்டினார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பே அந்த நகரத்தில் மனித வாழ்க்கையின் தடயங்களையும் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். 

அலெக்சாண்டருக்கு முன்பு, இந்தோ-கிரேக்கம், புத்தம், இந்து ஷாஹி மற்றும் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் அந்த நகரத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity