ஹாங்காங்கில் போலிசுக்கு ஆதரவாக பேரணி

ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாத காலமாக நடந்து வரும்  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது நடக்கும் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான சீன  ஆதரவாளர்கள் இன்று ஹாங்காங்கில் பேரணி நடத்தினர்.

வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகவும் அச்சமயங்களில் தாக்கப்படும் போலிசாருக்கு ஆதரவு தெரிவித்தும் சீன ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.

அப்போது, ஹாங்காங், சீன கொடிகளைக் கையில் ஏந்தியவாறு சீன ஆதரவாளர்கள் ஹாங்காங் சட்டமன்றம், போலிஸ் தலைமையகம் ஆகியவற்றுக்கு அருகே கூடியிருந்தனர்.

சிலர் போலிசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளையும் பிடித்திருந்தனர்.

சீன ஆதரவாளர்கள் இதற்கு முன்பு கூடியபோது, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர்.

ஹாங்காங் குடிமக்களுக்காகக் கலவரக்காரர்களை எதிர்த்துப் போராடுவதில் போலிசாரை ஆதரிப்பது சரியானது என சீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கலவரக்காரர்களுக்குப் பயந்து மௌனமாக இருக்கும் அனைவரும், ‘போராட்டங்கள் போதும்’ என்று குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் 49 வயது பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, சீன பல்கலைக் கழகத்தில் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே ஐந்து நாட்களாக நீடித்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறியதையடுத்து, தோலோ நெடுஞ்சாலையை முடக்கிய இடிபாடுகளை ஊழியர்கள் நேற்று காலை அகற்றினர்.

இந்நிலையில் ஒன்பது பல்கலைக்கழகங்களின் தலைவர்கள்  இரு தரப்பினரையும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இம்மாதிரியான சிக்கலான, சவாலான சூழல்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவாகவில்லை என்றும் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை மூலம் இதற்குத் தீர்வு காண முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சட்டவிரோத நடவடிக்கைக்காகப் பல்கலைக்கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹாங்காங் அரசாங்கம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.