வாக்காளர்கள் சென்ற பேருந்துகள் மீது துப்பாக்கிச்சூடு, கல்வீச்சு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று பெரும்பாலும் அமைதியாக நடந்தது. இருந்த

போதிலும் பிற்பகல் 1 மணி வரை 139 வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்தது. குறிப்பாக, காலையில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் வாக்களிப்பதற்காக செட்டிகுளம் நோக்கி பேருந்துகளில் சென்றபோது அந்தப் பேருந்துகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

மன்னார்-தந்திரிமலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வரிசையாகச் சென்றபோது துப்பாக்கிச்சூடும் கல்வீச்சுச் சம்பவங்களும் நடைபெற்றதாக போலிசின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது.

அந்தப் பேருந்துகள் சென்ற வழியில் டயர்களைக் கொளுத்தி வழியை மறைத்ததாகவும் போலிசார் விரைந்து சென்று அவற்றை அப்புறப்படுத்தியதோடு வாக்களிப்பு நிலையம் வரை பேருந்துகளில் இருந்த வாக்காளர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்ததாகவும் ஏஎஃப்பி செய்தி கூறியது.

ஒருசில சம்பவங்கள் தவிர நாடு முழுவதும் வாக்குப் பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியபோதே ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசைகளில் காணப்பட்டனர். பிற்பகல் 2 மணி நிலவரப்படி பெரும்பாலான வாக்களிப்பு மையங்களில் 65 முதல் 70 விழுக்காடு வரையிலான வாக்குககள் பதிவானது ஆர்வத்தைப் புலப்படுத்தியது.

தமிழ் மக்கள் நிறைந்திருக்கும் யாழ்ப்பாணம், அம்பாறை, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்றவற்றிலும் 70 விழுக்காட்டுக்கும் மேல் வாக்குகள் பதிவாயின. 12,845 வாக்களிப்பு மையங்கள் நிறுவப்பட்டு இருந்தன. ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

அதிபர் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 20 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள். ஆக அதிகமானோர் போட்டியிட்ட முதல் அதிபர் தேர்தல் இது. அதனால் வாக்குச்சீட்டுகள் மிகவும் நீளமாக இருந்தன.

தற்போது பதவியில் இருக்கும் அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என யாருமே இந்த அதிபர் தேர்தலில் போட்டியிடாததும் அரிதான சம்பவம்.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவுபெற்றதும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என்றும் நள்ளிரவுக்குப் பிறகு முதல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்த தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றைக்குள் எல்லா முடிவுகளையும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவற்றில் சுணக்கம் ஏற்பட்டால் நாளை (திங்கட்கிழமை) உறுதியாக அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சேவுக்கும் அதிபர், பிரதமர் பதவிகளை வகித்த, மறைந்த ரணசிங்கே பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

தமிழ் தேசியக் கூட்டணி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது. இருப்பினும் வாக்களிப்புக்கு முந்திய கணக்கெடுப்பின் படி கோத்தபய ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டது.