அன்வார்: ஆளும் கூட்டணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

அன்வார்: ஆளும் கூட்டணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

2 mins read
e3d1f06c-59ae-4ace-aff8-2f62b6f44a1d
அம்னோ தலைவர் அகமட் சாஹித் ஹமிடி (இடமிருந்து மூன்றாவது), தஞ்சோங் பியாயில் வெற்றிபெற்ற டாக்டர் வீ ஜெக் செங் (இடமிருந்து நான்காவது), முன்னாள் பிரதமர் நஜிப். படம்: தி ஸ்டார் -

ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் அபார வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதிலிருந்து ஆளும் பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் பக்கத்தான் ஹரப்பான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்றார் அவர்.

இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரான வீ ஜெக் செங் 25,466 வாக்குகளைப் பெற்று 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த அம்னோ தலைவர் அகமட் சாஹித் ஹமிடி, சீனர்கள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"சீனர்கள் தேசிய முன்னணி பக்கம் வந்ததன் அடையாளமாக இதனை ஏற்கிறோம். கூட்டணியில் இருக்கும் கூட்டுக் கட்சிகளுக்கு இது ஒரு வெற்றி சமிக்ஞை. தேசிய முன்னணி இன்னும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.

மேலும், பாஸ், அம்னோ இடையிலாக தேசிய ஒருங்கிணைப்பு எதிர்க்கட்சியை மேலும் வலுப்பெற செய்துள்ளதாக அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான கர்மெய்ன் சர்டினி 10,380 வாக்குகளைப் பெற்ற நிலையில், கெராக்கான் வேட்பாளர் வேண்டி சுப்ரமணியம் 1,707 வாக்குகள் பெற்றார்.

இடைத்தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த தலைவர் முஹைதின் யாசின், இது வாக்காளர்கள் தெரிவித்துள்ள தெளிவான அறிகுறியென்றும், கூட்டணி அதை கவனமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் கேமரன் மலை, செமிஞ்யி, ரந்தாவுக்குப் பின்னர், பக்கத்தான் ஹரப்பான் தோல்விகண்ட நான்காவது தேர்தல் ஆகும்.