எதிர்பார்த்ததைவிட மோசமான தோல்வி; ஆய்வு நடத்தக் கோரும் மகாதீர்

தஞ்சுங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் தோற்றது ஏன் என்பது குறித்த ஆழமான ஆய்வு தேவைப்படுவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அந்த இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தோற்றதற்கான காரணம்  குறித்த ஆய்வு, பல்வேறு நிலைகளில் செய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார். அந்த ஆய்வு விவரமாகவும் நேர்மையான முறையிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் டாக்டர் மகாதீர் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

2,000 வாக்கு பெரும்பான்மையில் எதிர்க்கட்சி வெல்லும் என எதிர்பார்த்ததாகக் கூறிய டாக்டர் மகாதீர், தனது கட்சி 15,086 வாக்குகளில் தோல்வி அடையும் என எதிர்பார்க்கவே இல்லை என்றும் கூறினார். “தஞ்சுங் பியாய் மக்களின் அந்த முடிவை நான் ஏற்கிறேன். இடைத்தேர்தலுக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்,” என்றார் அவர்.

கடந்த ஆண்டின் பொதுத்தேர்தலில் வென்ற பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தத் தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். தஞ்சுங் பியாய் இடைத்தேர்தலில் பரிசான் நேஷனல் வேட்பாளர் வீ ஜெக் சேங் 15,086 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். பக்கத்தான் ஹரப்பானின் வேட்பாளரான கர்மெய்ன் சர்டினிக்கு 10,380 வாக்குகள் கிடைத்தன.