பக்கத்தான் ஹரப்பான் அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும்

கோலாலம்பூர்: மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஒரு தவணைக்கு மேல் தொடர்ந்து ஆட்சி புரிய வேண்டுமெனில் அதற்கு நாட்டில் அதிதீவிர மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பலதரப்பட்ட துறைகளில் பெரும் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். அவை தலைமைத்துவத்தின் அடிப்படையில் கொள்கை மாற்றங்கள் அல்லது நாட்டின் வரவு செலவுத் திட்டம், மேம்பாட்டுப்பணிகள், நாட்டின் வருமானம் ஆகியவை உள்ளிட்ட மேலும் முக்கியமாக நாம் கருதும் அனைத்துத் துறைகளிலும் அந்த மாற்றம் தேவை என நேற்று நாடாளுமன்ற முகப்பில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் முகைதீன் தெரிவித்தார்.

தஞ்சோங் பியாய் தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அடைந்த தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் முகைதீன் இவ்வாறு பதிலளித்தார்.

தஞ்சோங் பியாய் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தேசிய முன்னணியின் டாக்டர் வீ ஜெக் செங், 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். டாக்டர் வீ, ஏற்கெனவே இரண்டு முறை தஞ்சோங் பியாய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இந்தத் தேர்தலில் அவர் மொத்தம் 25,466 வாக்குகள் பெற்றார். பக்கத்தான் ஹரப்பானின் வேட்பாளரான கர்மைன் சர்டினிக்கு 10,380 வாக்குகள் கிடைத்தன. ஜெராகனின் வெண்டி சுப்பிரமணியம் 1,707 வாக்குகளும் பெர்ஜசாவின் டாக்டர் பதுருல்ஹி‌ஷாம் அப்துல் அஸிஸ் 850 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் ஆங் சுவான் லாக் 380 வாக்குகளும் ஃபரிடா அர்யானி அப்துல் கஃபார் 32 வாக்குகளும் பெற்றனர். 596 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் துணை அமைச்சர் முகம்மது ஃபரித் முகம்மது ரஃபிக் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மலேசிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான திரு முகைதீன் யாசின், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தோல்வி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

“பொதுவாக நாம் சிறிய தோல்வியில் பாடம் கற்றுக்கொள்வது இயல்புதான்.

“வருங்காலத்தில் பெரிய தோல்வியைத் தழுவப்போகிறோம் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் தோல்வி ஒரு சமிக்ஞை என்றே கூற வேண்டும். இந்தத் தோல்வி குறித்து ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு நுணுக்கத்துடன் ஆராயப்படும்,” என்றார்.

பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டணிக் கட்சிகளின் சந்திப்புக் கூட்டம் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.

அதற்கு முன்னதாக பக்கத்தான் ஹரப்பான் கட்சி அதன் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளது. அந்தக் கூட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கணிப்புகள் பற்றி பேசப்படும் எனத் தெரிகிறது.

இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், அரசாங்கத்தின் உளவுத்துறையும் பக்கத்தான் ஹரப்பான் கட்சியும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கிவிட்டது அதிர்ச்சியளிப்பதாக கூறினார் அமைச்சர் முகைதீன்.

“இந்தத் தோல்வியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது எங்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.

“இதை முக்கியமாகக் கருதி, அக்கறையுடன் செயல்பட்டு மக்களின் மனதில் மீண்டும் இடம்பிடிப்போம்,” என்று அமைச்சர் முகைதீன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!