தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சுமத்ரா யானை ஒன்றின் உடல் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவிலுள்ள ரியாவ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தலைப் பகுதியிலிருந்த தந்தங்களும் அகற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 18) அன்று விவசாய வேலை செய்பவர் ஒருவர், அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் உடலைக் கண்டுபிடித்தார்.

துண்டாடப்பட்ட யானையின் தந்தம், சடலத்திலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. 

யானை இறந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகியிருக்கலாம் என்று குறிப்பிட்ட அதிகாரிகள், இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் குறிப்பிட்டனர்.

யானையை வேட்டையாடிக் கொன்று அதன் பின்னர் தந்தங்களை எடுப்பதற்காக அதன் தலை துண்டிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. நிலத்துக்காக காடுகளை அழிக்கும் முயற்சிகளுக்கு இடையே தங்களின் வசிப்பிடத்தை இத்தகைய விலங்கினம் இழந்து வருகிறது.

அத்துடன் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் யானைகளின் தந்தங்களுக்குப் பெரும் மவுசு நிலவுவதால், தற்போது 2,000க்கும் குறைவான சுமத்ர யானைகளே எஞ்சியுள்ளதாக இந்தோனீசிய சுற்றுப்புற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity