பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவிருக்கிறார். இம்மாதம் 29ஆம் தேதி பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று திரு கோத்தபய ராஜபக்சே இந்தியாவுக்கு வரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதிய அதிபராக பொறுப்பு ஏற்ற பிறகு திங்கட்கிழமை முதல் நாள் அலுவலகத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை திரு ஜெய்சங்கர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றதாகவும் இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்  அவரது தலைமையில் இரு நாடுகளின் உறவு புதிய உச்சத்தைத் தொடும் என்றும் டுவிட்டர் பதிவில் திரு ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார். இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதத்தையும் அழைப்புக் கடிதத்தையும் கோத்தபயவிடம் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக வாக்குகளைப் ெபற்று முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேயின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அவருக்கு பத்து விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனால் அவரை எதிர்த்துப்போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கு 80 முதல் 90 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன.

இது, தமிழர்களுக்கு அவர் மீதுள்ள கோபம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் கோத்தபய ராஜபக்சே சீனாவின் வலுவான ஆதரவாளர் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணம் அமைகிறது.

இதற்கிடையே அதிபர் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக முன்வந்துள்ளார்.