அதிபராக தம்பி, பிரதமராக அண்ணன்

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 

அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் சத்திய பிரமான நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த 16ஆம் தேதியன்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் கோத்தபய ராஜபக்சே, 52.25% வாக்குகள் பெற்று அந்நாட்டின் எட்டாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனையடுத்து, தனது கட்சி தோல்வியடைந்ததால் நேற்று பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமனம் செய்தார் அவருடைய சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதே காலக்கட்டத்தில் மகிந்த  ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன் 2004ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவியேற்கும் வரை பிரதமராகப் பதவி வகித்தார் மகிந்த ராஜபக்சே. 

பிறகு 2005ஆம் ஆண்டுமுதல் 2015ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சே, இலங்கையின் அதிபராக இருந்தார்.

அவரின் ஆட்சிக் காலத்தில் 2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity