கூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்

கோலாலம்பூர்: மலேசியாவில் திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் குறித்து விளக்கம் அளித்த மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது, மலேசிய நாடாளுமன்றக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றம் செய்யும்போது குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்பிக்கள் கலந்து கொண்டது முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்று டாக்டர்  மகாதீர் கூறினார். 

நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் பிரதமரால் தண்டிக்கப்படுவர் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அமைச்சரவையில் இடம்பெற ஆர்வம் கொண்டிருப்பதால் அவர்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவேண்டியுள்ளது,” என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். 

ஒரு மாநாட்டைத் தொடங்கிவைத்த பின்னர் டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறினார். 

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்களுக்கு சேவை ஆற்றுவது குறித்து அவர்கள் அதிக ஆர்வம் காட்டாதது போல்  நடந்துகொள்கின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து பரிசீலித்து வருவதாக டாக்டர் மகாதீர் அறிவித்த மறுநாள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசிய மிருப்பதாகவும் அவர் சொன்னார்.

அமைச்சரவையில் மாற்றம் செய்ய தான் அவசரப்படப் போவதில்லை என்றும் முதலில் தற்போதைய அமைச்சர்களின் சாதனைகள் மற்றும் திறமைகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான சாத்தியம்  குறித்து        தாங்கள்  விவாதிக்கவிருப்பதாகவும் டாக்டர் மகாதீர், செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

மொத்தம் 222 எம்பிக்களில் 24 பேர் மட்டுமே கடந்த புதன்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதே போல கடந்த மாதம் நாடாளுமன்றக் கூட்டதில் போதுமான எம்பிக்கள் கலந்துகொள்ளாததால் கூட்டம் தாமதமாகத் தொடங்கியது.

“எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய நினைக்கும் எம்பிக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை புறக்கணிப்பதை தவிர்த்து என்னைப் பற்றி நேரிடையாகவே குறை கூறலாம். என்னை பிடிக்கவில்லை என்றால் அதை அவர்கள்  வெளிப்படையாகவே என்னிடம் கூறலாம்,” என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.

பிரதமராக வர வேண்டும் என்று விரும்பும் எவரும் சரியான வழியில் அதற்காக  முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த விஷயத்தில் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறிய கருத்தை தானும் ஆமோதிப்பதாகவும் டாக்டர் மகாதீர் கூறினார்.