புத்ராஜெயா: இணைய மோசடிக் கும்பல் தொடர்பில் சீன நாட்டவர்கள் சுமார் 1,000 பேரை மலேசிய குடி நுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சைபர்ஜெயாவில் உள்ள இணைய மோசடிக் கும்பல் தலைமையகத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை யின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சைபர் ஜெயாவில் உள்ள 6 மாடிக் கட்டடத்தில் அக்கும்பல் செயல்பட்டு வந்ததாகவும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் ஸ்ய்மி டாவுட் கூறினார்.
பொதுமக்களிடமிருந்து வந்த பல புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் கடந்த ஒரு மாத காலமாக விழிப்பு நிலையில் இருந்து வந்ததாகவும் அவர் சொன்னார்.
சீனாவைச் சேர்ந்த பலர் இணைய மோசடியில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார். அக்கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மிகப் பெரிய இணைய மோசடிக் கும்பல் நடவடிக்கை முறியடிக்கப் பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்்.
அந்த சோதனையின்போது சுமார் 8,000 கைத்தொலைபேசிகள், 787 கணினிகள் மற்றும் 174 மடிக்கணினிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கும்பல் தலைமையகத்தில் சோதனை மேற்கொண்டபோது தப்பிக்க முயன்ற கும்பல் உறுப்பினர்கள் சிலர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதில் பல அதிகாரிகள் காயம் அடைந்ததாக திரு கைருல் ஸ்ய்மி டாவுட் கூறினார்.