ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை

ஹாங்காங்: ஹாங்காங்கில் பலதுறை தொழில் கல்லூரியை போலிசார் சுற்றி வளைத்துள்ள நிலையில் அந்த கல்லூரிக்குள் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களின் நிலை  குறித்து அவர்களின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் சுமார் 1,000 பேர்  அந்த கல்லூரிக்குள்  இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுவிக்கு மாறு போலிசாரை மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒரு தாய் தன் மகளை விடுவிக்குமாறு போலிஸ் அதிகாரிகளிடம் மண்டியிட்டு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு தாய் தன் மகனை விடுவிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஹாங்காங்கில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் இளையர்கள் எதிர்நோக்கும் நீண்டகால விளைவுகள் குறித்தும் பல பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் பலர் தங்கள் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் நடந்துகொள்ளும் விதம் தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலரை போலிசார் கைது செய்துள்ள நிலையில் இன்னும் பலர் போலிசாரால் தாக்கப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க போலிசார் ஒடுக்குமுறையை கையாண்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் காயம் அடைந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவுக்கு அனுப்பி விசாரிக்க வகை செய்யும் மசோதாவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடங்கிய ஆர்ப்பாட்டம் இன்று வரை நீடிக்கிறது.