கருவிகளில்லை, மருந்தில்லை; நடுவானில் முதியவருக்கு அவசர உயிர்காப்பு சிகிச்சை

இன்னும் ஆறு மணி நேர விமானப் பயணம் எஞ்சியிருந்த நிலையில் சிறுநீர் கழிக்க இயலாமல், சிறுநீர்ப்பை நிறைந்த நிலையில் மிகுந்த சிரமத்துக்கும் கடுமையான வலிக்கும் ஆளான முதியவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

மருத்துவ உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலை.

ஒரு மருந்தூசி, பால் பொட்டலங்களில் இருந்த உறிஞ்சு குழல்கள், ஆக்சிஜன் கவசத்தில் இருக்கும் குழாய்கள், ஒட்டுத்தாள் போன்ற விமானத்தில் கிடைக்கக்கூடிய எளிய பொருள்களைக் கொண்டே உயிர்காக்கும் அவசர சிகிச்சையை விமானத்திலேயே செய்து முடித்துள்ளனர் சீன அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இருவர். 

தெற்கு சீனாவிலிருந்து நியூயார்க்குக்குச் சென்ற விமானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஸாங் ஹாங், சியாவ் ஸான்சியாங்  எனும் அந்த இரு மருத்துவர்கள் பயணம் செய்த விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையைச் சமாளிக்க அவர்களே செயலில் இறங்கினர்.

விமானம் பறக்கத் தொடங்கி சுமார் 10 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் முதியவர் ஒருவருக்கு வயிறு உப்பியதுடன் வியர்த்து வழிந்தது. சிறுநீர் கழிக்க இயலாமல் மிகவும் சிரமப்பட்ட அவரின் சிறுநீர்ப் பையில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் அளவுக்கு சிறுநீர் இருப்பதை இந்த மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

விமானத்தில் கிடைத்த சில எளிய பொருள்களின் உதவியுடன் முதியவரின் சிறுநீர்ப் பையில் துளையிட்டு சிறுநீரை வெளியேற்ற அந்த மருத்துவர்கள் முடிவுசெய்தனர்.

சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக விமானத்தின் பிற்பகுதியில் கம்பளிகளை ஊழியர்கள் விரித்தனர்.

ஒரு பக்கமாகச் சாய்த்து படுக்கவைக்கப்பட்ட முதியவரின் சிறுநீர்ப் பையில் மருந்தூசியைக் கொண்டு துளையிட்டனர் மருத்துவர்கள். ஆனால், அந்தச் சிறிய துளை வழியாக சிறுநீர் சரிவர வெளியேற முடியாமல் போனது. முதியவரின் சிரமம் தொடர்ந்தது.

அதனையடுத்து மருத்துவர் ஸாங், உறிஞ்சு குழல்கள் வழியாக சிறுநீரை உறிஞ்சி வெளியேற்றினார். அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலான சிறுநீர் வெளியேற்றப்பட்டது. இத்தகைய இக்காட்டான சூழலில் சிறுநீரை வெளியேற்றுவதற்கு இதுவே சிறந்த முறை என்று கூறினார் திரு ஸாங்.

வலியிலிருந்து விடுபட்ட முதியவர் அடுத்த அரை மணி நேரத்துக்கு ஓய்வெடுத்த பின்னர் இருக்கைக்குத் திரும்பினார். விமானம் தரையிறங்கிய பிறகு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தினர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity