கோலாலம்பூர்: பிரதமர் பதவியை ஒப்படைக்கும் தி்ட்டத்தில் பிரதமர் மகாதீருக்கு எந்த மனமாற்றமும் இல்லை என்று கெஅடிலான் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
சில தரப்பினர் தற்போதைய நிலையை திசை திருப்ப முயற்சி செய்வது வருத்தம் அளிக்கிறது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
பிரதமர் மகாதீரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய போது சில விஷயங்கள் குறித்து தாங்கள் பேசியதாகவும் அதிகார மாற்றத்தில் டாக்டர் மகாதீரும் தாமும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஒப்புக் கொண்டதற்கு இணங்க அது அமைந்துள்ளது என்றும் அன்வார் கூறினார். பதவி மாற்றம் சுமுகமாக நடைபெற டாக்டர் மகாதீர் உத்திரவாதம் அளித்துள்ளதாகவும் அன்வார் கூறினார்.
ஜோகூரில் சென்ற வாரம் நடந்த இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி தோல்வி அடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை திரு அன்வாரிடம் டாக்டர் மகாதீர் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டணி கட்சிகளுக்குள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டாக்டர் மகாதீரை அன்வார் வியாழக்கிழமை அரை மணி நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அதிகார மாற்றம் சுமுகமாகவும் முறைப்படியும் ஒப்புக்கொண்ட காலகட்டத்திலும் நடைபெற வேண்டும் என்பதை டாக்டர் மகாதீரிடம் தான் தெரிவித்ததாகவும் அன்வார் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் அவர்களின் சுயநலத்திற்காக தங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் 72 வயதாகும் அன்வார் சொன்னார். நாட்டின் பொருளியல் வளர்ச்சி மற்றும் அடுத்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஏபெக் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த தாங்கள் இருவரும் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே அதிகார மாற்றத்திற்கு முன்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் எப்போது அந்த மாற்றம் ஏற்படும் என்பது தொடர்பாக எழும் யூகங்களால் ஏற்படும் நெருக்குதலை தணிப்பதன் அவசியத்தையும் அன்வார் உணர்ந் திருப்பதாக டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
அதிகார மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் மகாதீர், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி விரும்பினால் தன்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும் என்று கூறியுள்ளார்.