கோலாலம்பூர்: சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்காவிட்டால் ஹிட்லர் போன்ற ஒருவர் நாட்டின் தலைவராக வரக்கூடும் என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
சரியான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே ஒரு நாட்டை வல்லரசு மிக்க நாடாக கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் சொன்னார்.
நல்ல பண்புகள் இல்லாத ஒருவர் ஒரு நாட்டின் தவைவராகத் தேர்்ந்தெடுக்கப்பட்டால் சமுதாயம் சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளும் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.
பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தில் ஜெர்மன் நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள். ஒரு கட்டத்தில் அவர்கள் ஹிட்லரை தலைவராகத் தேர்ந்தெடுத்ததால் அந்நாட்டின் மதிப்பு குறைந்தது. “ஹிட்லர் ஜெர்மன் நாட்டு மக்களை போருக்கு கொண்டு சென்றார். பல தலைவர்கள் நாட்டின் சீர்குலைவுக்கு காரணமாக இருந்திருக்கின்றனர். சரியான தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் சமுதாயம் சிரமத்திற்கு உள்ளாகும்,” என்றும் டாக்டார் மகாதீர் கூறினார்.
மலேசிய பல்கலைக்கழகத்தில் ஒரு மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசியபோது டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறினார்.
உயர் பண்புகள் உள்ள தலைவர்கள் சமுதாயத்தில் நாகரிகத்தை வளர்ப்பார்கள் என்றும் மகாதீர் குறிப்பிட்டார். இதற்கிடையே எதிர்க்கட்சியான அம்னோவுடன் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் யோசனையை டாக்டர் மகாதீர் நிராகரித்துள்ளார்.
லஞ்ச ஊழலில் ஈடுபட்ட தலைவர்களை பாதுகாக்கும் நிலையை அம்னோ கொண்டி ருப்பதால் அக்கட்சியுடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்க முடியாது என்றும் டாக்டர் மகாதீர் கூறினார்.
தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க டாக்டர் மகாதீர் அம்னோ அல்லது பாஸ் ஆகிய இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று அம்னோ கட்சி்யைச் சேர்ந்த ஒருவர் கூறியது தொடர்பில் டாக்டர் மகாதீரிடம் கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
பிரதமர் பதவியில் நீடிக்க தமக்கு ஆதரவு தெரிவித்த அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பிரதமர் பதவி மாற்றம் குறித்து பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குள் உட்பூசல் நிலவுவதாகக் கூறப்படும் வேளையில் டாக்டர் மகாதீருக்கு அவ்விரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
டாக்டர் மகாதீரின் பெர்சத்து கட்சியுடன் அம்னோ சேர்ந்து அரசாங்கம் அமைக்கும் யோசனையை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.
அந்த யோசனை அவரது சொந்த கருத்து என்றும் அம்னோவுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறியுள்ளார்.