ஹாங்காங்: ஹாங்காங் போலிசாரின் பல்கலைக்கழக முற்றுகை முடிவுக்கு வரவுள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேலாக பல்கலைக்கழகத்தை சுற்றி் வளைத்து முற்றுகையிட்டுள்ள போலிசார் கூடிய விரைவில் அதை முடித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் திரண்டிருந்த அந்த பல்கலைக்கழக வளாகம் தற்போது பாலைவனம் போல் காட்சியளிப்பதாக ஹாங்காங் தகவல்கள் கூறின.
பல்கலைக்கழகத்தினுள் இருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் போலிசாரிடம் சரண் அடைந்த நிலையில் இன்னும் ஒரு சிலர் மட்டுமே சரண் அடைய மறுத்து வருகின்றனர். “போலிசார் அதிரடியாக பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தால் நாங்கள் மறைந்துகொள்வதற்கு பல இடங்கள் இங்கு உள்ளன,” என்று 21 வயது மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்தை போலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டது முதல் இதுவரை ஆர்ப்பாட்டக்காரர்களில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பல்கலைக்கழக நுழைவிடத்தில் பிளாஸ்டிக் தடுப்புகளையும் வேலிகளையும் போலிசார் அமைத்துள்ளனர்.
அத்துடன் அங்கு சீன ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹாங்காங்கில் இன்று நடைபெறவுள்ள மாவட்ட மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் முழு கவனமும் திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட மன்றத் தேர்தலில் 4.1 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதற்கிடையே ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹாங்காங்கில் நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதால் அமெரிக்கா-சீனா இடையே 16 மாத காலமாக நீடிக்கும் வர்த்தகப் பூசலை முடிவுக்கு கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் தாம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கிற்கு வெளியே சீனா மில்லியன் கணக்கான வீரர்களை நிறுத்த வேண்டாம் என்றும் சீனா அவ்வாறு செய்தால் அமெரிக்கா வுடன் வர்த்தக உடன்பாடு காண்பதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இதனால் அத்தகைய பெரிய தவற்றை செய்ய வேண்டாம் என்றும் சீனாவிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் திரு டிரம்ப் கூறினார்.
“நான் இல்லை என்றால் ஹாங்காங் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும்,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.