தோக்கியோ: ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் அடுத்த மாதம் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
ஜப்பானும் தென்கொரியாவும் ராணுவ உளவுத் தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கு அவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டதைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்கள் அடுத்த மாதம் சீனாவில் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதாக ஜப்பானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாகவே பூசல் நிலவுகிறது. ஜப்பானின் போர்க்கால குற்றச் செயல்களாலும் வர்த்தகம் தொடர்பிலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அண்மைய மாதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராணுவ உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக இரு நாடுகளும் செய்துகொண்ட உடன்பாட்டிலிருந்து விலகிக்கொள்ளப்போவதாக தென்கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஜப்பானுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள தென்கொரியா சம்மதம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த உடன்பாட்டில் நிலைத்திருக்க தென்கொரியா இணங்கியது.
தென்கொரியாவின் இந்த முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது. தென்கொரியாவும் ஜப்பானும் அவ்விரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
ஜப்பானியப் பிரதமர் சின்சோ அபேயும் இரு நாட்டு உறவு மிகவும் முக்கியம் என்றும் தென்கொரியா நல்ல முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.