இலங்கையில் அதிபர் தேர்தல் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி புறக்கணிப்புகள் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டி சமூக வலைத்தளங்களில் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீதிகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் உள்ள தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலத்தில் பெரும்பான்மையின் தீண்டத்தகாத முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. வீதிகளிலுள்ள தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன,” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமது கருத்துக்கு ஆதரவாக சில படங்களையும் தமது டுவிட்டரில் திரு சமரவீர இணைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளில் வீதியின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகை ஒன்றில் தமிழ் மட்டும் அழிக்கப்பட்டுள்ளதை அவர் இணைத்துள்ள படத்தில் காண முடிந்தது.
அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழ் எழுத்து பெயர்ப் பலகைகள் உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளதை இலங்கை ஊடகம் ஒன்று படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. “அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களால் வீதிகளில் இருந்த தமிழ்ப் பெயர்ப் பலகைகள் உடைக்கப்பட்டுள்ளன அல்லது அப்புறப்படுத்தப்பட்டுள்ளன,” என்பது அந்தச் செய்தி. மேற்கு மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை பகுதியில் வீழ்த்தப்பட்ட பெயர்ப் பலகையை அச்செய்தி வெளியிட்டுள்ளது.
அதே பகுதியில் மற்றோர் இடத்தில் இருந்த தமிழ்ப் பெயர்ப் பலகையைக் காணவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அதிகாரத்துவ மொழிகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சராக இதற்கு முன்னர் பதவி வகித்த மனோ கணேசன் தமது டுவிட்டரில் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு “இன்னோர் இருட்டு சகாப்தம் தொங்குகிறதா?,” என்று வினவியுள்ளார். “ஆளும் கட்சியின் நிறம் மாறினாலும் மும்மொழி தேசம் இலங்கை என்னும் நிலை மாறாது தொடர்ந்து கட்டிக்காப்போம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி அழிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்துமாறு போலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கல்வி, விளையாட்டு, இளையர் விவகார அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் டல்லஸ் அலகப்பெரும கூறியுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மொழியை அழிக்க தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் தமிழ் பெயர்ப் பலகை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் செயல்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என்றார் அவர். தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக அரசியலிலும் எதிரொலித்துள்ளது. வீதிகளில் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறினார்.