பொது ஒழுங்கையும் பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டு அதிபர் கேத்தபய ராஜபக்சே அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆயுதப் படைகளைக் குவிக்க உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை புதிய அரசாங்கம் மீட்டுக்கொண்ட பின்னர் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம் ஆகிய தமிழர் பகுதிகள் உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய முப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி, புதிய அரசாங்கத்தால் தமிழர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக வும் அங்குள்ள நிலைமையை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திமுக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.