ஹாங்காங் மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே நேற்று நடைபெற்ற தேர்தலில் 4.13 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
மாலை 5.30 மணி நிலவரப்படி அவர்களில் 56.4 விழுக்காட்டினர், அதாவது 2.33 மில்லியன் பேர் வாக்களித்ததாக தேர்தல் அலுவலகம் தெரிவித்தது. இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மன்ற தேர்தலைக் காட்டிலும் நேற்றைய தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் மிகுந்திருந்ததைக் காணமுடிந்தது. 2015 தேர்தலில் மாலை 5.30 மணி நிலரவத்து டன் ஒப்பிடுகையில் நேற்று 954,814 பேர் அதிகமாக வாக்களித்தனர்.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசுக்கும் இடையில் வன்முறை நிகழ்ந்த இடங்களில் ஒன்றான சுவென் வான் மாவட்டத்தில் ஆக அதிகமாக 59.2 விழுக்காட்டினர் வாக்களித்தனர். வாக்களிப்பு நேற்றிரவு 10.30 மணி வரை நடைபெற்றது.
பின்னிரவு முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்க அதிகாரிகள் தயாராக இருந்தனர். இன்று முழுமையான முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்படும் முன்னரே பலரும் வரிசையில் காத்திருந்தனர். சில வாக்காளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இளையர்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன. தேர்தல் நடைபெறும் 452 இடங்களிலும் போட்டி ஏற்பட்டுள்ளது இது முதல் முறை. மொத்தம் 1,090 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் சீன ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அண்மைய போராட்டங்களின் விளைவாக தங்களுக்கான ஆதரவு குறையுமோ என்று இவர்கள் கலைப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.